search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர வாய்ப்பு"

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. #FishingBan #FishingBanPeriod
    சென்னை:

    கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.

    தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.

    இந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

    அந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.



    கரை திரும்பிய விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வந்திருந்த மீன்களை கொண்டு, இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதன்பிறகு மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.  #FishingBan #FishingBanPeriod

    கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #petroldiesel
    சேலம்:

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இதனால் படிப்படியாக டீசல் விலை உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 72.70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதில் முடிவு ஏற்படாவிட்டால் லாரி வாடகை மேலும் உயர்த்தப்பட்டு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படவில்லை. தினமும் டீசல் விலை உயர்வால் சரியாக வாடகை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் தினமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    லாரிகள் அதிகமாக உள்ள நிலையில் லோடு கிடைக்காததால் ஓட்டம் இல்லாமல் ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் லாரிகள் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படுகிறது.



    டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் நீண்ட நேரம் காத்து நின்று செலுத்த வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கசாவடி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் உள்ள நான்கரை லட்சம் லாரிகளும் பங்கேற்கும். இதனால் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உள்ளது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #petroldiesel

    ×